Wednesday, March 11, 2009

தேவேந்திரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்....!

சங்கரன்கோவில் அருகே சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு தேவேந்திர வாலிபர் கொல்லப்பட்டனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தில் முப்புடாதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் வழிபட்டு வந்த தேவேந்திர மக்களுக்கும், இன்னொரு பிரிவினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந் நிலையில் மார்ச் 6ம் தேதி ஒரு சமூகத்தினர் பேச்சு வார்த்தைக்கு முன் வராததால் தேவேந்திர மக்கள் கோவிலுக்கு சென்று வழிபடலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து திருவிழா ஏற்பாடுகளை தேவேந்திர மக்கள் செய்து வந்தனர். இதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை. திருவிழா ஏற்பாடுகளால் இன்னொரு பிரிவினர் ஆத்திரமடைந்துள்ளனர். இதனால் திருவிழா பணிகளில் ஈடுபட்ட கருப்பசாமி, ஈஸ்வரன், பரமசிவம், சுரேஷ் உள்ளிட்டோரை அவர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே பரமசிவம், ஈஸ்வரன் ஆகியோர் உயிரிழந்தனர். சுரேஷ் பலத்த காயமடைந்தார். தமிழக அரசும், காவல்துறையும் முன்னேச்சரிக்கையுடன் செயல்படாததால் தேவேந்திரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், இது மிகுந்த கண்டனத்துக்கு உரியது. கொலை வெறி தாக்குதல் நடத்தியோர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ரூ. 5 லட்சம், அரசு வேலை வழங்க வேண்டும்...

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூறுகையில், கோவிலில் மூன்று சமூதாய மக்கள் வழிபாடு நடத்த சட்டரீதியான பாதுகாப்பு வழங்காமல் பேச்சுவார்த்தையை நீடித்ததுதான் கொலைக்கு காரணம்.

இந்த சம்பவத்தில் சாதாரண கிராம மக்கள் ஈடுபடவில்லை. கூலிப்படையினரும் சம்பந்தபட்டு இருக்கிறார்கள். செந்தட்டி கிராமத்தில் திட்டமிட்டு மோதலை உருவாக்க சிலர் முயற்சி செய்வதாக தெரிகிறது. இங்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அரசு உரிய பாதுகாப்பு, உரிமைகளை வழங்க வேண்டும்.

கொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்திற்கு ரூ. ஒன்றரை லட்சம் மட்டுமே அரசு வழங்கியிருக்கிறது. அவர்களுக்கு ரூ. 5 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். கிராமத்துக்கு செல்ல மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.

No comments: