Thursday, December 18, 2008

வன்கொடுமை
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா ஆறாம்பண்ணை கிராமம். இஸ்லாமியர், தேவர் மற்றும் பள்ளர் வாழ்ந்து வருகின்றனர். வல்லநாடு முதல் திருவைகுண்டம் வரை அனந்தனம்பிகுரிச்சி, மணக்கரை, தோழப்பந்பண்ணை என தேவர் மட்டுமே உள்ள கிராமங்கள் அருகிலுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஆறாம்பண்ணை கிராமத்தின் கருப்பசாமி(தேவர்) என்பவர் தற்கொலை செய்து கொள்கின்றார். இதற்கு காரணம் கருப்பசாமி வீட்டில் வேலை செய்து வந்த மாரியப்பன்(பள்ளர்) தான் காரணம் என்ற குற்றச்சாட்டினை அவ்வூரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் மூக்காண்டி(தேவர்) மற்றும் பலர் கூறுகின்றனர். அதுவும் ஆதிக்க சக்திகள் நிறைந்த அந்த ஊரில் மாரியப்பன் கருப்பசாமியின் மனைவியுடன் தொடர்பு வைத்துதான்?? காரணம் என்றனர். (மாரியப்பன் பார்க்கவே பரிதாபமாக உள்ளார்) அத்தோடு மாரியப்பனின் வீட்டைப் பூட்டி சாவியை வைத்துக் கொண்டனர். மாரியப்பன் ஊரைக் காலி செய்து விடுகின்றார். விடவில்லை ஆதிக்க சக்திகள் மாரியப்பனின் உறவினர்களை ஆறாம்பண்ணையினை விட்டு காலி செய்து அருகிலுள்ள அராபத்நகர் என்ற காலனியில் குடியேற வைத்துள்ளனர். மாரியப்பனின் விவசாய நிலங்களை சகோதரர்கள் ராமர்(பள்ளர்), கண்ணன்(பள்ளர்) ஆகியோர் விவசாயம் செய்துள்ளனர். வீட்டைப் பிடுங்கிய கும்பல் விவசாய நிலத்தினையும் கேட்டு அடித்து மிரட்டி, வீட்டின் ஓடுகளை உடைக்க, ராமர்(பள்ளர்) புகாரின் பேரில் மூக்காண்டி(தேவர்), சங்கரபாண்டி(தேவர்) ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். 2004 ல் கொடுத்த புகாருக்கு 2008 ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். தீண்டாமை வன்கொடுமை சட்டப்படி மூக்காண்டி(தேவர்), சங்கரபாண்டி(தேவர்) இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஜாமீனில் வெளி வந்த மூக்காண்டி(தேவர்), சங்கரபாண்டி(தேவர்), ராஜா(தேவர்), முருகன்(தேவர்), பெருமாள்(தேவர்), ராமசாமி(தேவர்) ஆகியோர் சேர்ந்து கடந்த 15 தேதி செவ்வாய்கிழைமை மாலை 3.30 மணியளவில் ஆறாம்பண்ணையிலிருந்து எல்.கே.ஜி. படிக்கும் தனது மூண்றரை வயது மகனை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லும் போது கண்ணன் (பள்ளர்)(வயது 34 த/பெ சுப்பிரமணியன் ) என்ற முக்கிய சாட்சியினை ' எங்களுக்கு எதிரா கம்ளைன்ட் கொடுக்க துணிஞ்சிட்டிங்கலடா ' என்று அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். வெட்டுப்பட்ட கண்ணன் உடலை? காவல்துறை கைப்பற்றி முறப்பநாடு காவல்நிலையத்தில் இரவு 11 மணி வரை வைத்துவிட்டு பின்னர் அவசர, அவசரமாக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு ஒரே விடிவு சட்டம் என்று இருந்தவர்களுக்கு இந்த 'ஆதிக்க சக்திகளின் சட்டம்' கொடுத்த பதிலடி "கொலை". இருந்த பத்து வீட்டினையும் காலி செய்து உறவினர்கள் வீடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர் மக்கள். இஸ்லாமிய சகோதரர்கள் ஆதரவுடன்தான் கண்ணன் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கண்ணன் செய்த தவறு நீதிமன்றத்தில் உண்மையைச் சொன்னது மட்டும்தான். மும்பை குண்டு வெடிப்பில் பலியான 200 இந்தியர்களுக்குக்காக இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க தயாராகின்றது. இலங்கையில் இனமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதற்கு தமிழகம் ஒருசேர குரல் கொடுக்கின்றது. ஆனால், சாதியின் பெயரால் ஆதிக்க சக்திகளால் அன்றாடம் கொள்ளப்படும் இவர்களும் தமிழர்கள்தானே?..... இந்தியர்கள்தானே?...... மனிதர்கள்தானே?...... வன்கொடுமை மற்றும் தீண்டாமை தடுப்புச் சட்டம் பதிவு செய்வது அரிது, தண்டனை கொடுப்பது அதனினும் அரிது, தண்டித்தால் உயிர் பறிக்கும் கொடூரம். அப்படியெனில் அடித்தால் அடிபட வேண்டுமா?.. மானமும், மாண்பும் யாருக்கு?. .. (குறிப்பு : காவல்துறை மூக்காண்டி, ராஜா, ராமசாமி ஆகியோர் மீது மட்டும் வழக்கு பதிந்துள்ளது. இக்கிராம மக்களின் கோரிக்கைகள் 1. இறந்தவரின் குடும்பத்திற்கு சட்டத்தின் படி ரூபாய் ஐந்து லட்சமும், அரசு வேலையும் உடனே வழங்க வேண்டும். 2. போலீஸ் பாதுகாப்பு வேண்டும். 3. குறிப்பிட்ட சாதியினைச் சேர்ந்த காவலர்கள் அதிகம் உள்ள முறப்பநாடு காவல் நிலையத்தில் பணி மாற்றம் நடைபெற வீண்டும். 4. கருங்குளம் - செய்துங்கநல்லூர் பாலம் கடடித்தந்தால் பாதுகாப்பாக வெளியூர் செல்ல முடியும். )........................................................................................


ஜெ.இ.பிரபாகரன்,
குடிமக்கள் சனநாயகம்,
தூத்துக்குடி.