Thursday, February 24, 2011
நானா? கிருஷ்ணசாமியா? -ஜான் பாண்டியன் ஆவேசம்!
ஜான் பாண்டியன். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர். தென் மாவட்டங்களில் தேவேந்திர குல சமுதாயத்தினரால் முதன் முதலில் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அம் மக்களை ஒன்று திரட்டி 1995-ல் மாநாடு நடத்தியவர். அதிரடி அரசியல்வாதியான இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட 42 வழக்குகள் பாய்ந்திருக்கின்றன.
"அத்தனையும் பொய் வழக்குகள்... அதனாலேயே, அவற்றிலிருந்து மீள முடிந்தது. என் மீது ஒரு வழக்கு கூட இப்போது நிலுவையில் இல்லை. எட்டரை ஆண்டுகள் என்னை சிறையில் தள்ளிய, கோவை விவேக் கொலை வழக்கும் அந்த ரகம்தான். உச்சநீதிமன்றமே 'நான் நிரபராதி' என்று தீர்ப்பளித்து விடுதலை செய்திருக்கிறது...' என பூரிப் பில் திளைத்திருந்த ஜான் பாண்டியனை நெல் லையில் அவரது வீட்டில் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.
நக்கீரன் : சிறை அனுபவத்தைச் சொல்லுங்களேன்..
ஜான் பாண்டியன் : நக்கீரன் விரும்பினால் நான் தொடராகவே எழுதுகிறேன்... அந்த அளவுக்கு பல கொடுமைகள் நடக்கிறது. நானும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றேன்.
நக்கீரன் : இந்த விவேக் கொலை வழக்கில் உண்மையில் நடந்தது என்ன?
ஜா.பா. : எனக்கு கொலை செய்யப்பட்டவரை யும் தெரியாது. கொலையாளியையும் தெரியாது. நிரபராதி என இப்போது விடுதலை ஆகியிருக்கும் கரீம் என்பவரிடம் நான் போனில் பேசினேன் என்ற ஒரே காரணத்துக்காக என்னைக் கொலைகாரனாக்கி விட்டார்கள். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி யாக இருந்த ரத்தின சபாபதி இப்போது ஏ.டி. எஸ்.பி.யாக இருக்கிறார். கொலையான விவேக்கும் இந்த ரத்தின சபாபதியும் ஒரே ஊர்க்காரர்கள். ஒரு சாதிக்காரர்கள். எட்டு வருடங்களுக்கு மேலாக என்னை சிறையில் முடக்கிவிட்ட அவரை நான் விடப்போவதில்லை. வழக்கு தொடரப்போகிறேன். சாதிப் பார்வையோடு எனக்கெதிராக நடந்து கொண்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, ஹை கோர்ட் நீதிபதிகள் கூட இருக்கிறார்கள். குறிப்பிட்ட அந்த நீதிபதிகளின் பெயர்களைக் கூட என்னால் சொல்ல முடியும்.
சிறையில் அமைச்சர் வீர பாண்டியார் தம்பி மகன் பாரப் பட்டி சுரேஷை சந்தித்தேன். 2007-ல் ஒரு சொத்து வாங்கியதற்காக அவரை 6 பேர் கொலை வழக்கில் சேர்த்திருக்கிறார்கள். என்ன கொடுமை? அமைச்சரின் உற வினருக்கே இந்த நிலை.
நக்கீரன் : நீங்கள் விடுதலை ஆகி வெளியே வர வேண்டும் என்பதற் காகவே உங்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் நீக்கு போக்காக நடந்து கொண்டதாக ஒரு பேச்சிருக்கிறதே..?
ஜா.பா. : இது வதந்திதான். சிறையில் தகுதியின் அடிப்படை யில் எனக்கு கிடைத்து வந்த ஏ கிளாஸ் கேன்சல் ஆனதற்கு காரணமே கலைஞர்தான். தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஒரு துளி அளவுக்கு... சிறு தூசி அளவுக்குக் கூட எனக்கு சப்போர்ட் பண்ண வில்லை.
நக்கீரன் : சிறை வாழ்க்கை உங்களை மாற்றியிருக்கிறதா? சாத்வீகமான நடவடிக்கைகளுக்கு இனி திரும்பவேண்டும் என்னும் சிந்தனை, அங்கே எந்த சந்தர்ப்பத்தி லாவது உங்கள் மனதில் ஒரு உறுத்தலாக வெளிப்பட்டதா?
ஜா. பா. : சிறையில் நான் வருந்தியதோ, சிந்தனை வயப்பட்டதோ எதுவுமே நிகழவில்லை என்பதே உண்மை. அதே நேரத்தில் படிக்க நிறைய நேரம் கிடைத்தது. சுயசரிதை கூட எழுதி விட்டேன். இயல்பிலேயே நான் சாத்வீகமானவன்தான்.
நக்கீரன் : அப்படியென்றால் இன்றுவரை நிழலாக உங்களைத் தொடர்ந்தபடியே இருக்கும் இந்த ரவுடி இமேஜ்..?
ஜா.பா. : எட்டு வருடங்களாக சிறையில் இருந்திருக்கிறேன். அப்போது எந்த ஒரு குற்றச் செயலிலாவது ஈடுபட்டிருக்க முடியுமா? ஆனால், இன்னும் இங்கே காவல்நிலையத்தில் ரவுடி லிஸ்ட்டில் என் பெயர் இருக்கிறது. 1986-ல் எம்.ஜி.ஆரே என்னை வந்து பார்த்தார். அவரது ஆட்சியில் துப்பாக்கி உரிமம் எனக்கு கிடைக்கச் செய்தார். 2001-ல் ஜெயலலிதா என்னோடு கூட்டணி வைத்துக்கொண்டு, வேட்பாளராக எழும்பூரில் நிறுத்தினார். ஒரு ரவுடியாக இருந்தால் அரசியல் தலைவர்கள் இத்தனை மரியாதை தருவார்களா? பல லட்சம் தேவேந்திர குல மக்கள் என்னைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பார்களா? மக்களோடு தொடர்பே இல்லாமல் இத்தனை வருடங்கள் சிறையில் இருந்த எனக்கு வழி நெடுகிலும் வரவேற்பு தந்து, பாசத்தைப் பொழிவார்களா?
ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிப்புக்கு ஆளாகும்போதெல்லாம் கிளர்ந்தெழுவேன். தப்பு செய்பவன் அரசியல்வாதியாக இருந்தா லும் யாராக இருந்தாலும், அவர்களுக்கு நான் சிம்ம சொப்பனம் தான். என் சமுதாயத்துக்கு ஒரு அரணாக நான் நிற்பது குற்றமா?
நக்கீரன் : கொடியன்குளம் கலவரத்தையெல்லாம் மறந்துபோகும் அளவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களிடையே ஒரு இணக்கமான சூழல் நிலவுகிறதா?
ஜா.பா. : சாதீய அடக்கு முறை இப்போதும் இருக்கவே செய்கிறது. பல கிராமங்களிலும் இணக்கமான சூழ்நிலை இல்லாததைப் பார்க்க முடிகிறது.
நக்கீரன் : 2001-ல் உங்களோடு கூட்டணி கண்ட அ.தி.மு.க. இப்போது புதிய தமிழகத்துடன் கூட்டணி கண்டிருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
ஜா.பா. : நான் டாக்டர் கிருஷ்ணசாமியை ஒரு பொருட் டாகவே எப்போதும் நினைப்பதில்லை. அவரும் களத்தில் இறங்கட் டும். நானா? அவரா? உண்மையிலேயே யார் தேவேந்திரர் என்பதை நிரூபிக்கட்டும். தேவேந்திர மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். 35 ஆண்டுகளாக என் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன். 1805-ல் என் மூதாதையர்கள் தூக்கிய கொடி அது. புதிய தமிழகம் என்று சொல்லிக்கொண்டு இனிமேல் யாரும் எங்கள் தாய்க்கொடி யைத் தூக்க விடமாட்டேன். எந்தக் கட்சியுடன் கூட்டணி என்று இப்போதே சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களைச் சந்தித்தபடியே இருக்கிறேன். அவர்களின் கருத்துக்களைக் கேட்கிறேன். எம் மக்களின் விருப்பப்படிதான் கூட்டணி அமையும். என்னுடைய அரசியல் நடவடிக்கைகளும் இனி தீவிரமாக இருக்கும்.
யாருக்கும் ஒரு தொந்தரவும் தராவிட்டால் சரிதான்.. ஜமாய்ங்க ஜான் பாண்டியன்!
சந்திப்பு : சி.என்.இராமகிருஷ்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
buy valium ways get high valium - valium for social anxiety disorder
ad797 armani beauty nederland,jessicasimpsonsuomimyyntiin,goodr sunglasses australia,quiksilverbrasilonline,maui jim titanium sunglasses,ara leveälestiset kengät,aerosoles shoes,сандалии ara,goodr sunglasses running sc251
Post a Comment