Saturday, March 10, 2012

தாமிரபரணியில் படுகொலை செய்யப்படாத நான் - மாரிசெல்வராஜ்


“கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்’, ” நீ என்னை உன் அடிமை என்று  நினைக்கும் போது உன்னை கொல்லும் ஆயுதமாய் நான் மாறிவிடுவது எங்கள் விடுதலையே”,  “ஆடுகளைதான் பலியிடுவார்கள் எங்களை போன்ற சிங்கங்களை அல்ல”, ”அடக்கு முறையை புரட்டிப் போடுவோம் நமக்காய் புதியதமிழகம் படைப்போம்”, ”உங்களுடனான எங்கள் சமாதானம் எம் சந்ததியருக்கு யாம் கொடுக்கும் ஒரு கோப்பை விஷம்”

 இப்படி பேனர்களிலும் சுவர்களிலும் வாசகங்களை எழுதி போஸ்டர்களை ஒட்டி முடிக்கும்போது மணி நள்ளிரவு ஒரு மணியை தாண்டியிருந்தது. காலையில் எட்டு மணிக்கே கிளம்பவேண்டும்.இப்போது தூங்க போனால்தான் சரியாக இருக்கும் என்று எல்லாரும் வீட்டிற்கு கிளம்பினார்கள். இப்போது போய் வீட்டில்  கதவை தட்டினால் கண்டிப்பாய் அம்மா கதவை திறக்க மாட்டாள். அப்படியே திறந்தாலும் நடுஇரவு என்றும் பாராமல் அண்ணன் வாசலில் நிற்கவைத்து கேள்வி கேட்பான்.

அவர்களை பொறுத்தவரை ஒரு பதினோறாம் வகுப்பு படிக்கிற பையன் சாதிய விடுதலை, சமூக போராட்டம், ஆர்பாட்டம், அம்பேத்கர், இம்மானுவேல் என்று சொல்லிகொண்டு வேலைவெட்டி இல்லாத பெரியவர்களுடன்  சேர்ந்து அலைந்து திரிவதும், கையில் கிடைக்கும் கரித்துண்டுகளால் கோவிலின் வெள்ளை சுவர்களில் “சாதிய அடக்குமுறையை வேரறுக்கும் சாணம் தீட்டிய ஆயுதமாவோம்” என்று ஒளிந்து ஒளிந்து எழுதி திரிவதும் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாதவை.

ஒன்பதாம் வகுப்பு வரை அடித்து திருத்த பார்த்தார்கள். இப்போது கொஞ்சம் வளர்ந்துவிட்டேன் பதினோறாம் வகுப்பு படிக்கிறேன் ஆகையால் அடிப்பது இல்லை ஆனால்  நடுஇரவில் என் வருகையின்போது கதவடைப்பும் தீராத பசியின்போது சாப்பட்டின் புறக்கனிப்பும் தான் இப்போது என் குடும்பம் எனக்கு தரும் தண்டனை.

ஆறாம் வகுப்பு படிக்கும்போது அவிழ்ந்துவிழும் டவுசரோடு கொடியன்குளம் கலவரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்காய் கிராமத்தில் கோனிப்பைகளை தூக்கிகொண்டு அரிசி வசூலித்தபோதும் 1995ல் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கலவர நாட்களில் இரவு முழுவதும் கண் விழித்து ஊரை பாதுகாக்கும் இளைஞர்களுக்கு தேனீர், பீடி , சிகரெட் வாங்கி கொடுத்தபோதும் தொடங்கியது இந்த ஆர்வம். இப்போது என் குடும்பமே கவலைபடும் அளவுக்கு அதிகமாகிபோனது.
காலையில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 600க்கும் மேற்பட்ட தொழிலார்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வற்புறுத்தி திருநெல்வேலியில் நடத்தப்படும் மாபெரும் பேரணிக்கு செல்லத்தான் இந்த பேணர்களும் போஸ்டர்களும் தயார்படுத்தியிருந்தோம். 

கண்டிப்பாய் நாளை நான் பேரணிக்கு போவதை எங்கள் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். காலையில் நான் வாகனத்தில் ஏறும்போது என் அண்ணனோ அல்லது அப்பாவோ வந்து என்னை அடித்து இழுத்துச் செல்லக்கூடும்.அதோடு மட்டுமல்லாமல் வாகன ஏற்பாட்டாளர்களோடு அவர்கள் என்னை அழைத்து போவதற்காய் சண்டை போடக்கூடும். ஆனால் கண்டிப்பாய் நான் போகவேண்டும் அந்த எழுச்சியை என் சமூகத்தின் போர்குணத்தை  நேரில் பார்த்தே ஆகவேண்டும்.

நான் இதுவரை போகாத அந்த  பெரிய நகரத்தில் எம் கொடியை பிடித்து நான் எனக்கான கோஷங்களை முழங்க வேண்டும் என்பதற்காய் அன்றிரவு வீட்டிற்கு போகாமல் இரவுமுழுவதும் ஊர் வாசக சாலையில் படுத்து கொண்டேன் காலையில் விடிந்ததும் ஊருக்கு வெளியே போய் நின்று கொண்டு வாகனம் வரும்போது ஏறிகொள்ளவேண்டும் என்பது என் ரகசிய திட்டம்.

1999 ஜீலை 23 விடிந்தது எங்கள் வீட்டில் என்னை தேடத் தொடங்கி இருந்தார்கள். நான் ஏற்கனவே ஊருக்கு வெளியே நின்றிருந்தேன். வாகனம் வந்தது என்னை ஏற்றிக்கொள்ள மறுத்தார்கள். அம்மாவும் அண்ணனும் வந்து தேடியதாகவும் என்னை கண்டிப்பாய் வாகனத்தில் ஏற்றி செல்லகூடாதென்று சொன்னதாகவும் சொன்னார்கள். நான் அழுதுவிடுபவனை போல அடம்பிடித்தேன். ராஜகிளி மாமாதான் என்னை ஏற்றிகொள்ள சம்மதித்தார் ஆயிரம் நிபந்தனைகளோடு ஒரு கொடியும் கடைசி இருக்கையும் எனக்கு தரப்பட்டது.

ஜன்னலின் வழியே வேகமாய் பின்னோக்கி ஓடிகொண்டிருந்த மருத மரங்களை பார்த்துகொண்டே வந்தேன். வீட்டின் மீதிருந்த பயம் அந்த மரங்களோடு வேகமாய் பின்னோக்கி ஓடிபோனது. சத்தமும் கோஷமுமாய் வாகனம் செய்துங்கநல்லூர் தாண்டியிருந்தது. நான் இதுவரை செய்துங்கநல்லூரை தாண்டி போனதேயில்லை என் அரசியல் ஆர்வத்திற்கு அந்த சின்ன நகரமான செய்துங்கநல்லூரே போதுமானதாக இருந்தது. இப்போதுதான் முதன்முதலில் செய்துங்கநல்லூரை தாண்டுகிறேன். செய்துங்கநல்லூரில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது திருநெல்வேலி. 

காலையில் சரியாக எட்டு மணிக்கே நெல்லை ரயில்வே நிலையத்தில் போய் இறங்கினோம். மக்கள் கூட்டம் கூட்டமாய் வரத்தொடங்கியிருந்தார்கள். நான் அந்த பெரிய ரயில் நிலையத்தை முதன்முதலாய் அதிசயமாய் பார்த்தபடி நின்றேன். ராஜகிளி மாமா என் கையைபிடித்து ஒரு பெரிய ஹோட்டலுக்கு கூட்டிக்கொண்டு போய் ஆறு இட்லிகளை வாங்கி கொடுத்தார். நாங்கள் சாப்பிட்டிவிட்டு வரும்போது கூட்டம் அதிகமாகவே கூடியிருந்தது. பெண்கள் கை குழந்தைகளோடும் வயாதனவர்கள் கை பிடித்த வாலிபர்களும் நிறைய கூடியிருந்தார்கள் அவர்கள் கையில் இருந்த கொடிகளையும் வாசகங்கள் எழுதப்பட்ட பேனர்களை போலவும் அவர்கள் முழங்கிய கோஷங்கள் அவ்வளவு அவேசமாய் இருந்தது .போலிசார் அங்குமிங்கும் பதட்டமாக ஓடி கூட்டத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தார்கள். கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க உற்சாகம் கரைபுரண்டது. நான் பார்க்க ஆசைபட்ட என் அடிமை சமூகத்தின் எழுச்சி என்னையும் ஆட்கொண்டது ராஜகிளி மாமா முழங்கிய கோஷத்தை நானும் பின் தொடர்ந்து முழங்கினேன்  என் கையில் ராஜகிளி மாமா “சம உரிமைக்காய் உயிர்விட அஞ்சோம்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த அந்த அட்டையை கொடுத்து அதை தூக்கிபிடிக்க சொன்னார். கூட்டம் அதிகரித்துகொண்டே இருந்தது மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் தங்களுக்குரிய கொடியோடும் அவர்கள் கட்சியால் வரையறுக்கப்பட்ட வாசகத்தோடு கூடிய அட்டைகளை பேனர்களை பிடித்தபடி வந்து குவிந்தார்கள்.

“டேய் என் பின்னாடியே வரனும் கூட்டத்துக்கு உள்ள போகாத ஒரு ஓரமாவே வா ஜாக்கிரதை” ராஜகிளி மாமா என்னை பார்த்து மிக சத்தமாய் சொன்னார். கூட்டம் இப்போது கட்டுக்கடங்காத ஆரவாரத்தோடு கோஷமிட்டு ஆர்பரித்தது ஆம் நேரில் பார்க்க ஆசைபட்ட தலைவன் வந்துவிட்டார். முழுமையாய் அவர் முகம் பார்க்க முடியாத தூரத்தில் கூட்டத்திற்குள் நாங்கள் நின்றோம் சிறியவனான எனக்கு சுத்தமாய் தெரியவில்லை . கூட்டம் எனக்கு மேலே ஏறி செல்லவும் தயாராக இருந்தது. தலைவர்கள் பேசிய உரைகள் எதுவும் எங்கள் காதில் விழவில்லை. எங்கள் காதில் விழுந்ததெல்லாம் ஆவசமாய் முழங்கபட்ட போராட்ட கோஷங்கள் தான்.

பேரணி தொடங்கியது கூட்டம் ஆரவாரமாய் புறப்பட்டது தலைவர்கள் முன்னாடி வாகனங்களில் போனார்கள் எனக்கு பெயர் தெரியாத தலைவர்களும் அதில் இருந்தார்கள். ரோட்டில் இருந்த கொஞ்ச கடைகள் அடைக்கபட்டிருந்தது. நான் கோஷமிட்டவாறே அந்த பெரிய நகரத்தின் பெரிய கட்டிடங்களையும் அந்த பெரிய கடைகளையும் பார்க்க தவறவில்லை. சரியாக பேரணி கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுபாலத்தில் நகர்ந்துகொண்டிருந்தது.
நான் இப்போதுதான் முதல் முறையாக இந்த பாலத்தில் நடக்கிறேன். அதிலிருந்து எங்கள் ஊருக்கு வரும் தாமிரபரணி ஆற்றை பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தது.  

எனக்கு அந்த நேரத்தில் அந்த சந்தேகம் ஏன் தான் வந்ததோ ராஜகிளி மாமாவிடம் கேட்டேன் “ஏன் மாமா இங்க ஆத்துல முட்டளவுக்கு தான் தண்ணீ வருது ஆனால் நம்ம ஊருக்கு பக்கத்துல வரும்போது மட்டும் கழுத்தை தாண்டி தண்ணீர் வருது” என்று. மாமா சிரித்தபடி சத்தமாய் சொன்னார் “டேய் அங்க வரும்போது எல்லா சாக்கடையும் ஒன்னா சேர்ந்து தண்ணீர் அதிகமாயிடுது” என்று.

இப்போதும் வெயில் கொஞ்சம் அதிகமாக அடிக்க ஆரம்பித்திருந்தது.எனக்கு அருகில் மிக சத்தமாய் கை குழந்தையோடு கோஷமிட்டபடி வந்த ஒரு பெண் குழந்தையை கொஞ்ச நேரம் என்னை வாங்க சொல்லி தன் ஆடைகளை சரி செய்தாள். அந்த குழந்தை வெயில் தாங்காமல் அழதொடங்கியிருந்தது அழுத குழந்தையை வாங்கி மறுபடியும் கோஷமிட்டபடி அவள் நகர்ந்து போனாள். ஒரு பெரியவர் யாரிடமாவது தண்ணீர் வாங்கி தர முடியுமா என்று கேட்ட போது பதினெட்டு வயது மதிக்கதக்க கறுத்த பெண்ணொருத்தி அவருக்கு தன்னிடம் இருந்த பாட்டில் தண்ணீரை கொடுத்தார். குடித்த முடித்ததும்  “அடிமைகள் அல்ல நாங்கள் அடிமைகள் அல்ல” என்றபடி நகர்ந்தார். எல்லாரையும் நான் கவனிக்க ராஜகிளி மாமாவும் என்னோடு வந்தவர்களும் கொஞ்சம் முன்னாடி எனக்கு மறையும் அளவிற்கு போயிருந்தார்கள்.
திடீரென்று கூட்டம் நகராமல் நிற்க  தூரத்தில் தலைவர்கள் போலிசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தார்கள். பெண்களும் ஆண்களும் அரசுக்கும் போலிசாருக்கும் எதிரான ஆவேசமாக கோஷமிட்டபோது கூட்டம் நெருக்கி அடித்தது. ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்டனர். என்ன நடக்கிறது என்று ஊகிப்பதற்குள் எல்லா திசையில் இருந்து கற்களும் போலிசாரின் லத்திகளும் சுழண்டது.பெண்களின் சத்தமும் குழந்தைகளின் அலறலும் எல்லாரையும் பயம்கொள்ள செய்தது கூட்டம் நாலா புறமும் சிதறியது. ஓட முடியாதவர்கள் அந்த பெரிய பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்தார்கள்.எனக்கு எங்கு ஓட வேண்டும் யாரிடம் போகவேண்டும் என்று தெரியாமல் ஓடினேன். ராஜகிளி மாமாவும் மற்றவர்களும் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை ஓடி கொண்டேயிருந்தேன் ஒரு பெரியவரின் மீது மோதி இருவரும் கிழே விழுந்தோம். இப்போது கோஷங்கள் மரண ஓலங்கலாய் எனக்கு கேட்டது.
எப்படியோ சில சிராய்ப்புகளோடும் சின்ன சின்ன அடிகளோடும் வழி தெரியாமல் எல்லா திசையிலும் ஓடி அலைந்து வண்ணார்பேட்டை திருச்செந்தூர் ரோட்டை பிடிக்கும் போது மணி மாலை ஐந்து ஆகிவிட்டது. என்ன நடந்தது எல்லாரும் எங்கே போனார்கள். எந்த பேருந்தும் ஓடாமல் அந்த பெரிய நகரம் கொண்டிருந்த அந்த மாலை நேர மயான அமைதி என்னை மேலும் பயம் கொல்ல செய்தது. இந்த மெயின்ரோட்டை பிடித்து கிழக்கு திசைநோக்கி போனால் ஊருக்கு போய்விடலாம் என்று எனக்கு நானே உறுதிசெய்து கொண்டு நடக்கவும் ஓடவும் தொடங்கினேன். ராஜகிளி மாமா எங்க இருப்பார் என்னை தேடுவாரா அங்கே என்ன நடந்தது ஏன் எல்லாரையும் போலிஸ்காரர்கள் அடித்தார்கள்.
அந்த பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்துகொண்டு அந்த போலிஸ்காரன் எங்கு கொண்டுபோனான். நான் கொஞ்ச நேரம் கையில் வைத்திருந்த அந்த குழந்தை இப்போது யார் கையில் இருக்கும், நான் அடிமை இல்லை என்று சொன்னதற்காக ஏன் அந்த முதியவரை நான்கு போலிஸ்காரர்கள் மிதித்தார்கள்.” என்று எதுவுமே தெரியாமல் தனியாக ஆளில்லாத அந்த பெரிய சாலையில் ஓடியது அழுகையாய் வந்தது.

அழுது கொண்டே ஓடினேன். செய்துங்க நல்லூர் தாண்டும்போது நல்ல இருட்டத் தொடங்கிவிட்டது செய்துங்க நல்லூரில் கூட எல்லா கடைகளும் அடைக்கபட்டிருந்தது ஆங்காங்கே போலிசார் நின்றிருந்தார்கள் அவர்கள் கண்ணில்படாமல் ஒரு தெருவுக்குள் புகுந்து ஓடிவரும்போது ஒரு கறுப்பு கலர் நாய் ஈவு இரக்கமில்லாமல் என்னை மெயின்ரோட்டை சேரும்வரை துரத்தியது. 

கருங்குளம் பேருந்து நிறுத்தத்தில் கொஞ்ச நேரம் ஓடமுடியாமல் படுத்திருந்தேன் சாலையில் ஒரு சிலவாகனங்களும் பேருந்துகளும் மிக வேகமாய் சீறி பாய்ந்தது மேலும் பயம் உண்டாக்க நடையும் ஓட்டமுமாய் வந்து எங்கள் ஊர் பேருந்து நிறுத்தத்தை வந்தடைந்தேன்.

ஆளில்லா வனாந்தரத்தில் கட்டபட்ட சத்திரம் போல் கிடந்த அந்த பேருந்து நிறுத்தத்தில் கொஞ்ச நேரம் படுத்தேன். இன்னும் ஊருக்குள் ஒரு கிலோ மீட்டர் போகவேண்டும் பசியும் தாகமும் ஒன்றாக வதைக்க பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆற்றை நோக்கி நடந்தேன். மிக அமைதியாக இருந்தது ஆறு தவளைகள் சத்தமும் பூச்சிகளின் சத்தமும் மட்டும் கேட்டு கொண்டிருந்தது அரை நிலா ஆற்றில் ரசிக்க ஆளில்லாமல் கிடந்தது. இரு கைகாளும் அள்ளி வயிறு நிறைய தண்ணீரை ஒரு வழி தப்பிய சின்ன மிருகத்தை போல குடித்துவிட்டு ஊருக்குள் வந்து சேர்ந்தேன்.

அந்த நடு இரவில் ஊர் அவ்வளவு அமைதியாய் இருந்தது. தெற்கு தெருவில் ஏதோ ஒரு நாயின் சத்தமும் பாண்டியன் தெருவில் யார் வீட்டிலோ பாடிய ரேடியோ சத்தமும் மட்டுமே கேட்டுகொண்டிருந்தது. வீட்டில் போய் கதவை தட்ட தைரியமில்லாமல் போய் மாட்டுதொழுவத்தில் படுத்துக்கொண்டேன் அழுகையும் பயமுமாய் தூங்கிபோனேன்.

காலையில் அக்கா எழுப்பி வீட்டிற்குள் கூட்டிகொண்டு போனாள். வீட்டிற்குள் ராஜகிளி மாமா கவலையோடு உட்கார்ந்திருந்தார். அப்பா அவரை திட்டி கொண்டிருந்தார். அண்ணன் எனக்கு அதிகம் செல்லம் கொடுப்பதாய் சொல்லி அம்மாவை அடிக்க அடிக்க ஓடினான். அக்கா மட்டும் என்னை திட்டி கொண்டிருந்தாள் அப்போதுதான் அப்பாவின் காலுக்கு அடியில் கிடந்த அந்த செய்திதாளில் ”மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்காய் நடந்த ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சிறு குழந்தை உட்பட பதினேழு பேர் தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்தார்கள்” என்ற செய்தியை படிக்கும்போது தான் தெரிந்தது நேற்று நள்ளிரவில் பசியோடும் தாகத்தோடும் இரு கையால் நான் அள்ளி குடித்தது எம்மோடு கோஷமிட்ட பதினேழுபேரின் ரத்தம் என்று.
பிசாசு பிடித்துக் கொண்டவனை போல சத்தாமாய் ஓலமிட்டு கதறி நான் அழ என் அம்மாவும் அண்ணனும் எல்லாரும் பயந்தே போய்விட்டார்கள். அம்மா ஓடி வந்து என்னை தன் மார்போடு சேர்த்து அழவிடாமல் அனைத்துக் கொண்டு அவளும் அழ ராஜகிளி மாமா கதறி அழுதார்.

- மாரிசெல்வராஜ்


குறிப்பு:
மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டும்,  ஏற்கனவே  பல போராட்டாங்களில் கைது செய்யப்பட்டிருர்ந்த 600 க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரியும் புதிய தமிழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளுமான த.மா.கா, இடதுசாரிக் கட்சிகள்,முஸ்லீம் அமைப்பினர் ஜீலை 23,1999 ல் நெல்லையில் பேரணி நடத்தினார்கள்.

நெல்லையில் நடைப்பெற்ற தாழ்த்தப்பட்டவர்களின் முதல் பெரும் எழுச்சி மிகுந்த பேரணி இதுவே இன்று வரை.

போலிஸாரின் லத்தி பிரயோகத்தில் ஏற்பட்ட அமளியில் .விக்னேஷ் என்ற ஒரு வயது குழந்தை உட்பட 17 பேர் மாண்டார்கள்.

போராட்டம் முடிந்த மறுநாள் அரசு 600 பேரையும் விடுதலை செய்து கேட்ட கூலி உயர்வும் கொடுக்கப்பட்டது. 40 ரூபாயாக இருந்த தினக்கூலி 150ரூபாயாக உயர்த்தப்பட்டது. 

அரசாங்கம் மோகன் கமிசன் அமைத்தது. ஏனைய கமிசன்களைப் போல் இக்கமிசனும் அரசாங்கத்தைப் பாதுகாத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு
அறிவுரை  கூறியது.

இதற்குப்பின் புதியதமிழகம் கிருஷ்ணசாமில் எப்பெரியப் போராட்டத்தையும் நடத்த வில்லை. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி மேற்கொண்டார். புதிய தமிழகம் நீர்த்துப் போனது. 

Thanks to 

Sunday, May 1, 2011

தேவேந்திர குல 41ம் ஆண்டு இன உணர்வு விழா





எம் தேவேந்திர குல சொந்தங்கள் சங்கமிக்கும் 
எம் மண்ணின் உணர்ச்சிப் பெருவிழா 
41 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது......
உணர்வாளர்களே ஒன்றிணைவோம்....
ஒலிக்கட்டும் நம் உணர்வின் ஓசை உயிர் உள்ளவரை ......... 

Thursday, February 24, 2011

நானா? கிருஷ்ணசாமியா? -ஜான் பாண்டியன் ஆவேசம்!

 
         ஜான் பாண்டியன்.  தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர். தென் மாவட்டங்களில்  தேவேந்திர குல சமுதாயத்தினரால் முதன் முதலில் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அம் மக்களை ஒன்று திரட்டி 1995-ல் மாநாடு நடத்தியவர். அதிரடி அரசியல்வாதியான இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட 42 வழக்குகள் பாய்ந்திருக்கின்றன.

"அத்தனையும் பொய் வழக்குகள்... அதனாலேயே, அவற்றிலிருந்து  மீள முடிந்தது. என் மீது ஒரு வழக்கு கூட இப்போது நிலுவையில் இல்லை. எட்டரை ஆண்டுகள் என்னை சிறையில் தள்ளிய,  கோவை விவேக் கொலை வழக்கும் அந்த ரகம்தான். உச்சநீதிமன்றமே 'நான் நிரபராதி' என்று தீர்ப்பளித்து விடுதலை செய்திருக்கிறது...' என பூரிப் பில் திளைத்திருந்த ஜான் பாண்டியனை நெல் லையில் அவரது வீட்டில் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.

நக்கீரன் : சிறை அனுபவத்தைச் சொல்லுங்களேன்..

ஜான் பாண்டியன் : நக்கீரன் விரும்பினால் நான் தொடராகவே எழுதுகிறேன்... அந்த அளவுக்கு பல கொடுமைகள் நடக்கிறது. நானும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றேன்.

நக்கீரன் :  இந்த விவேக் கொலை வழக்கில் உண்மையில் நடந்தது என்ன?

ஜா.பா.  :   எனக்கு கொலை செய்யப்பட்டவரை யும் தெரியாது. கொலையாளியையும் தெரியாது.  நிரபராதி என இப்போது விடுதலை ஆகியிருக்கும் கரீம் என்பவரிடம் நான் போனில் பேசினேன் என்ற ஒரே காரணத்துக்காக என்னைக் கொலைகாரனாக்கி விட்டார்கள்.  இந்த வழக்கின் விசாரணை அதிகாரி யாக இருந்த ரத்தின சபாபதி இப்போது ஏ.டி. எஸ்.பி.யாக இருக்கிறார். கொலையான விவேக்கும் இந்த ரத்தின சபாபதியும் ஒரே ஊர்க்காரர்கள்.  ஒரு சாதிக்காரர்கள். எட்டு வருடங்களுக்கு மேலாக என்னை சிறையில் முடக்கிவிட்ட அவரை நான் விடப்போவதில்லை.  வழக்கு தொடரப்போகிறேன்.  சாதிப் பார்வையோடு எனக்கெதிராக நடந்து கொண்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, ஹை கோர்ட் நீதிபதிகள் கூட இருக்கிறார்கள்.  குறிப்பிட்ட அந்த நீதிபதிகளின் பெயர்களைக் கூட என்னால் சொல்ல முடியும்.

சிறையில் அமைச்சர் வீர பாண்டியார் தம்பி மகன் பாரப் பட்டி சுரேஷை சந்தித்தேன்.  2007-ல் ஒரு சொத்து வாங்கியதற்காக அவரை 6 பேர் கொலை வழக்கில் சேர்த்திருக்கிறார்கள். என்ன கொடுமை? அமைச்சரின் உற வினருக்கே இந்த நிலை.

நக்கீரன்  :   நீங்கள் விடுதலை ஆகி வெளியே வர வேண்டும் என்பதற் காகவே உங்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் நீக்கு போக்காக நடந்து கொண்டதாக ஒரு பேச்சிருக்கிறதே..?

ஜா.பா. :  இது வதந்திதான். சிறையில் தகுதியின் அடிப்படை யில் எனக்கு கிடைத்து வந்த ஏ கிளாஸ் கேன்சல் ஆனதற்கு காரணமே கலைஞர்தான். தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஒரு துளி அளவுக்கு... சிறு தூசி அளவுக்குக் கூட எனக்கு சப்போர்ட் பண்ண வில்லை.

நக்கீரன் : சிறை வாழ்க்கை உங்களை மாற்றியிருக்கிறதா? சாத்வீகமான நடவடிக்கைகளுக்கு இனி திரும்பவேண்டும் என்னும் சிந்தனை, அங்கே எந்த  சந்தர்ப்பத்தி லாவது உங்கள் மனதில் ஒரு உறுத்தலாக வெளிப்பட்டதா?

ஜா. பா. : சிறையில் நான் வருந்தியதோ, சிந்தனை வயப்பட்டதோ எதுவுமே நிகழவில்லை என்பதே உண்மை.  அதே நேரத்தில் படிக்க நிறைய நேரம் கிடைத்தது. சுயசரிதை கூட எழுதி விட்டேன். இயல்பிலேயே  நான் சாத்வீகமானவன்தான்.

நக்கீரன்  : அப்படியென்றால் இன்றுவரை நிழலாக உங்களைத் தொடர்ந்தபடியே இருக்கும் இந்த ரவுடி இமேஜ்..?

ஜா.பா. : எட்டு வருடங்களாக சிறையில் இருந்திருக்கிறேன். அப்போது எந்த ஒரு குற்றச் செயலிலாவது ஈடுபட்டிருக்க முடியுமா? ஆனால், இன்னும் இங்கே காவல்நிலையத்தில் ரவுடி லிஸ்ட்டில் என் பெயர் இருக்கிறது. 1986-ல் எம்.ஜி.ஆரே என்னை வந்து பார்த்தார். அவரது ஆட்சியில் துப்பாக்கி உரிமம் எனக்கு கிடைக்கச் செய்தார். 2001-ல் ஜெயலலிதா என்னோடு கூட்டணி வைத்துக்கொண்டு, வேட்பாளராக எழும்பூரில் நிறுத்தினார். ஒரு ரவுடியாக இருந்தால் அரசியல் தலைவர்கள் இத்தனை மரியாதை தருவார்களா? பல லட்சம் தேவேந்திர குல மக்கள் என்னைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பார்களா? மக்களோடு தொடர்பே இல்லாமல் இத்தனை வருடங்கள் சிறையில் இருந்த எனக்கு வழி நெடுகிலும் வரவேற்பு  தந்து, பாசத்தைப் பொழிவார்களா?

ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிப்புக்கு ஆளாகும்போதெல்லாம் கிளர்ந்தெழுவேன்.  தப்பு செய்பவன் அரசியல்வாதியாக இருந்தா லும்  யாராக இருந்தாலும், அவர்களுக்கு நான் சிம்ம சொப்பனம் தான். என் சமுதாயத்துக்கு ஒரு அரணாக நான் நிற்பது குற்றமா?

நக்கீரன் : கொடியன்குளம் கலவரத்தையெல்லாம் மறந்துபோகும் அளவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களிடையே  ஒரு இணக்கமான சூழல் நிலவுகிறதா?

ஜா.பா. :  சாதீய அடக்கு முறை இப்போதும் இருக்கவே செய்கிறது. பல கிராமங்களிலும் இணக்கமான சூழ்நிலை இல்லாததைப் பார்க்க முடிகிறது.

நக்கீரன் : 2001-ல் உங்களோடு கூட்டணி கண்ட அ.தி.மு.க. இப்போது புதிய தமிழகத்துடன் கூட்டணி கண்டிருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

ஜா.பா. : நான் டாக்டர் கிருஷ்ணசாமியை ஒரு பொருட் டாகவே எப்போதும் நினைப்பதில்லை. அவரும் களத்தில் இறங்கட் டும். நானா? அவரா? உண்மையிலேயே யார் தேவேந்திரர் என்பதை நிரூபிக்கட்டும். தேவேந்திர மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். 35 ஆண்டுகளாக என் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன். 1805-ல் என் மூதாதையர்கள் தூக்கிய கொடி அது. புதிய தமிழகம் என்று சொல்லிக்கொண்டு இனிமேல் யாரும் எங்கள் தாய்க்கொடி யைத் தூக்க விடமாட்டேன். எந்தக் கட்சியுடன் கூட்டணி என்று இப்போதே சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களைச் சந்தித்தபடியே இருக்கிறேன். அவர்களின் கருத்துக்களைக் கேட்கிறேன். எம் மக்களின் விருப்பப்படிதான் கூட்டணி அமையும். என்னுடைய  அரசியல் நடவடிக்கைகளும் இனி தீவிரமாக இருக்கும்.

யாருக்கும் ஒரு தொந்தரவும் தராவிட்டால் சரிதான்.. ஜமாய்ங்க ஜான் பாண்டியன்! 

சந்திப்பு : சி.என்.இராமகிருஷ்ணன்
 

Monday, September 13, 2010

எம் இனத்திற்கு எதிரான துரோகிகளுக்கான எச்சரிக்கை....







 
 மானங்கெட்ட தி மு க 
அரசே 
எம் மக்கள் விழிப்படைந்து விட்டோம். இலவசத்தால் எம் மக்களை ஏமாற்றி விடலாம் என்றா நினைத்தாய்?... எம் மக்கள் சோற்றில் உப்பிட்டு உண்பவர்கள், உன்னுடைய இலவசத்துக்காக (எங்கள் வரிப்பணத்தில்..) எங்கள் இனத்தை அடகு வைக்க நாங்கள் ஒன்றும் உங்களைப்போன்ற வந்தேறிகள் அல்ல, உண்ணுவதற்கு உழைப்பையும் ஆளுவதற்கு வீரத்தையும் எம் இனப்போராளிகள் எம் நெஞ்சில் விதைத்துள்ளனர். உனது அரியணைக்கும் அறிவாலயத்துக்கும் சாவு மணி அடிக்க கிளம்பிவிட்டோம். பரமக்குடியில் நாங்கள் எடுத்த சபதம் தேவேந்திரர் ஆட்சிக்கு அடித்தளம் அமைப்பது மட்டுமல்ல எம் இனத்திற்கு எதிரான துரோகிகளை ஒழிப்பதும்தான். இது உங்களுக்கான எச்சரிக்கை.... உங்களுடைய விளம்பரத்துக்கே இந்த நிலைமை எனில் உங்களுடைய நிலைமை (?) யை பார்த்துக்கொள்ளுங்கள் ...